மீடியா பிளேயர்கள் என நாம் அழைப்பது கம்ப்யூட்டர்களில் ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்கும் புரோகிராம்களாகும். இன்டர்நெட்டில் இத்தகைய பிளேயர்கள் இலவசமாக இயக்கிப் பயன்படுத்தவென அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. அத்துடன் மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் மீடியா பிளேயர் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இத்தனை இருக்கையில் எதனைப் பயன்படுத்துவது என்பது நம் முன் உள்ள கேள்விக் குறிதான். சிலர் அனைத்தையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்த்துப் பின் தமக்கென ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.இந்த மீடியா பிளேயர்கள் எப்படி கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்குகின்றன, டிவிடிக்களை எப்படி இயக்குகின்றன, எப்படி அவற்றை காப்பி செய்கின்றன, பிளே லிஸ்ட் மற்றும் மீடியா லைப் ரேரிகளை எப்படி உருவாக்கிப் பயன்படுத்தத் தருகின்றன என்பதன் அடிப்படையில் இந்தக் குறிப்புகள் தரப்படுகின்றன.
1. விண் ஆம்ப் (winamp)
வெகு காலமாக கம்ப்யூட்டரில் பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். இதன் இலவச பிளேயரை அண்மையில் டவுண்லோட் செய்து அதனைத் தொடக்க காலத்தில் வந்த விண் ஆம்ப் பிளேயருடன் ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி மலைப்பைத் தருகிறது. அதிகமான வசதிகளுடன் கூடிய இதன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. சற்று குறைந்த அளவில் பணம் கட்டினால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதிகளுடன் ஒரு பதிப்பு கிடைக்கிறது.
இலவசமாகக் கிடைக்கும் தொகுப்பு அனைத்து வசதிகளுடன் கிடைப்பதால் விரும்புபவர்கள் அதனையே பெற்று பயன்படுத்தலாம். இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் எக்கச் சக்க ஆப்ஷன்ஸ் கிடைக்கிறது. இதன் ஷவுட்காஸ்ட் டிவி மற்றும் ரேடியோ (Shoutcast TV and Radio) பலவகையான வீடியோ காட்சிகள், முழு திரைப்படங்களைத் தருகின்றன.
நூற்றுக்கணக்கான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களை இதன் மூலம் கேட்கலாம். எம்பி3 பிளேயரை கம்ப்யூட்டருடன் இணைக்கையில் அதனை எளிதாகத் தன்னுடன் இணைத்து இயங்குகிறது. இதனால் ஆடியோ ட்ரேக்குகளை இணைக்க முடிகிறது. இதன் மூலம் ஒருமீடியா லைப்ரேரியை மிக எளிதாக அமைக்க முடிகிறது. இதன் மூலம் சிடி ஒன்றை பதியலாம். ஆடியோ சிடி ஒன்றை அதன் டிரைவில் போட்டு அதனை இதன் மூலம் இயக்கலாம். இதற்கான பல ஆட் ஆன் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பதியும்போது இதனை இயக்கும் அனுபவம் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. விண் ஆம்ப் தொகுப்பை வேண்டாம் என்று ஒதுக்குவது மிகக் கஷ்டம்.ஏனென்றால் அது தரும் எளிமையான, ஆனால் இனிமையான வசதிகள் அவ்வளவு உள்ளன. ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. இது கம்ப்யூட்டரில் பதிந்த வீடியோ பைல்களை இயக்கினாலும் டிவிடியை இயக்க மறுக்கிறது. அத்துடன் டிவ் எக்ஸ் பைல்களையும் இயக்கவில்லை. ஆனால் இது ஒரு பெரிய குறை இல்லை. விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பு 11க்கு மாற்றாக ஒரு மீடியா பிளேயரைத் தேடுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2. ரியல் நெட்வொர்க்ஸ் ரியல் பிளேயர் (Real Networks Realplayer)
இதனை விரும்புபவர்கள் அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள்; வேண்டாம் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுப்பவர்கள் மீண்டும் இதன் பக்கம் திரும்ப மாட்டார்கள். இலவசமாக அடிப்படை புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதனை இறக்கிக் கொண்டு மேலும் கூடுதலாக வசதிகள் வேண்டுமாயின் ரூ.1,600 வரை செலுத்தி பெறலாம். இலவச பதிப்பிலேயே அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளது. மியூசிக் வீடியோ மற்றும் ரேடியோ ஸ்டேஷன்களையும் பெற இதில் வழி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மீடியாக்களையும் மிக நன்றாக இயக்குகிறது.
மியூசிக் ட்ரேக்குகள் கொண்ட லைப்ரேரியை அமைப்பதுவும் எளிதாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒரு எம்பி3 பிளேயரை இணைத்துவிட்டால் அதனுடன் இணைந்து இயங்குகிறது. ட்ரேக்குகளை சிடியிலிருந்து பிரித்து பதியும் வசதி தரப்படுகிறது. கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள டிவிடி, ஏ.வி.ஐ., டிவ் எக்ஸ் மற்றும் டபிள்யூ எம் வி மூவிகளை இயக்குகிறது. ஆனால் ஒரு சில பார்மட்டுகளை இயக்கக் கட்டளை கொடுத்த பின்னரே இதற்கு ரியல் பிளஸ் கட்டணம் கொடுத்து அப்கிரேட் செய்திட வேண்டும் என செய்தி வருகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி இந்த செய்தி வருவது எவ்வளவு பொறுமைசாலியையும் எரிச்சல் அடைய வைத்திடும்.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
3. வீடியோ லேன் வி.எல்.சி. (VideoLan VLC )
இது ஒரு லைட் வெய்ட் மீடியா பிளேயர். இன்ஸ்டால் செய்வது மிக மிக எளிது; இயக்குவது அதைக் காட்டிலும் எளிது. ஆடியோ பைல்களை இயக்குகையில் சிறிய விண்டோவில் பாடல் வரியைக் காட்டுகிறது; அவ்வளவுதான். வேறு தகவல்கள் இருக்காது.
ஈக்குவலைசர் மூலம் ஒலியை மாற்றுவது சற்று சிரமமாக உள்ளது. ஆனால் ஈக்குவலைசர் இல்லாமல் இயக்குவதே சிறந்தது என அனுபவம் கூறுகிறது. பிளே லிஸ்ட் அமைப்பது எளிதாக உள்ளது. ஆனால் எல்லாமே ட்ராப் டவுண் மெனு மூலம் உள்ளதால் சற்று ஏமாற்றமாக உள்ளது. இன்டர்நெட் ரேடியோ இதில் இல்லை. ஆனால் டிவிடி இயக்குவற்கும் வீடியோ இயக்குவதற்கும் இந்த பிளேயர் மிகச் சிறந்தது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
4. ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் 9
மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் மியூசிக் பைல்களை வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் நாடுவது ஐ ட்யூன்ஸ் ஆகும். இதனை www.apple.com/itunes என்ற இணைய தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த தேர்வு பெர்சனல் கம்ப்யூட்டரில் சிக்கலை உருவாக்கும். மேக் கம்ப்யூட்டரில் இணைந்து செயல்படும். இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும்போதே பல ஆப்ஷன்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது. அதே போல இன்ஸ்டால் செய்த பின்னரும் பைல்களை இதனுடன் இணைப்பது மிக எளிது. இந்த புரோகிராம் பதியப்படும்போதே பல ரேடியோ ஸ்டேஷன்கள் இணைந்தே பதியப்படுகிறது.
சிடிக்களில் உள்ளவற்றை இறக்கலாம்; ஆனால் பைல் பார்மட் மாற்றங்களுக்கு மிக சிரமப்பட வேண்டியுள்ளது. இறக்கிப் பதிந்த ஆடியோ பைல்களை எம்பி3க்கு மாற்ற மீண்டும் அதே நேரத்தை எடுத்து வேலையைச் சிக்கலாக்குகிறது. ஐபாட் சாதனம் வைத்திருப்பவர்களுக்கு ஐ–ட்யூன்ஸ் தான் இறக்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய புரோகிராமாக உள்ளது. ஏனென்றால் ஐ–பாட் சாதனத்திற்கு பைல்களை மாற்றுவது மிக எளிதாக அமைகிறது. மற்ற வகையில் ஐ–ட்யூன்ஸ் அவ்வளவு எளிதானதாக இயக்குவதற்கு மற்றவற்றுடன் இணைந்து செல்வதாக இல்லை.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
5. மீடியா பிளேயர் கிளாசிக் 6.4.9.1
இது ஓர் ஓப்பன் சோர்ஸ் மீடியா பிளேயர். இது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்குகையில் அவ்வளவாக மெமரியைக் கேட்காது. இது ஏறத்தாழ விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4 போலவே கட்டமைப்பும் இயக்க வேலைப்பாடும் கொண்டது. இதனை டவுண்லோட் செய்வது எளிது; ஆனால் இன்ஸ்டால் செய்வதில் சற்று பொறுமை வேண்டும். இது ஸிப் செய்யப்பட்ட பைலாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. ஒரு போல்டராக கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்கிறது. பின் அதனை என்ன செய்திட வேண்டும் என்ற செய்திகள் எதுவும் இல்லை.
இருமுறை கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் இன்ஸ்டால் செய்திடும் முன் எக்ஸ்ட்ராக்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை முடித்துவிட்டால் மிகவும் எளிதாக இயக்கலாம். ஏனென்றால் இதன் இயக்கத்தில் அவ்வளவாக ஆப்ஷன்ஸ் இல்லை. இதில் ஆன்லைன் ரேடியோ பிளேயர் எதுவும் இல்லை. ஆடியோ பைல் இயக்கப்படுகையில் அதன் தலைப்பு, ஆர்டிஸ்ட் மற்றும் அதன் நீளம் ஆகியவை காட்டப்படுகின்றன. ஆனால் லைப்ரேரியோ கிராபிக் ஈக்குவலைசரோ இல்லை. ஒரு தரமான ஆடியோ சிடியை இயக்கும்போது அதன் தகவல்கள் காட்டப்படுவதில்லை. பாடி முடிக்கும்போது மட்டுமே அதன் நீளம் தெரிகிறது. டிவிடி யை இதில் இயக்கலாம் என்ற குறிப்பு கிடைக்கிறது. ஆனால் இயக்கத் தொடங்கியவுடன் பைல் மாற்றப்படுகிறது; ஆனால் இயங்க மறுக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட வீடியோ பைல்கள் நன்றாக இயங்குகின்றன.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
6.மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11
விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் 11 ஒரு நல்ல சாய்ஸ். அநேகமாக அனைத்து புதிய விண்டோஸ் கம்ப்யூட்டர்களிலும் இது பதிந்தே தரப்படுகிறது. இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆடியோ, ரேடியோ, வீடியோ மற்றும் டிவிடிக்களை எளிதாக இயக்கலாம். பதிந்தவற்றை நல்ல வகையில் லைப்ரேரியாக அமைக்கலாம். ரேடியோ மற்றும் வீடியோவுடன் இணைக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறப்பாக இயங்குகிறது.
டிவிடி இயக்க அப்டேட்டட் பைல்களை இறக்கியிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கம்ப்யூட்டர்களில் டிவிடி டிரைவ்கள் இருப்பதால் இது ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆன்லைனில் திரைப்படம் பார்ப்பதையும் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ பைல்களை இயக்குவதையும் எளிதாக்க அவற்றிற்குத் தேவையான கோடெக் பைல்கள் பதியப்பட்டுள்ளன.
டிவ் எக்ஸ் பைல்களை இயக்க முடியாது என மெசேஜ் கிடைத்தாலும் அவை இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஓர் ஆல்பத்தை பிரித்து பதிய முடியும். பைல் வகை மற்றும் அளவுகளை மாற்ற முடியும். பலர் இந்த மீடியா பிளேயர் குறித்து குறை சொன்னாலும் அனைத்து வகைகளிலும் இது சிறந்த பிளேயராகவே உள்ளது. தற்போது விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் 12 விண்டோஸ் 7 உடன் இலவசமாகவே பதிந்து கொடுக்கப்படுகிறது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
பெர்சனல் கம்ப்யூட்டர் மூலமாக எப்போதாவது வீடியோ அல்லது மியூசிக் இயக்குபவரா நீங்கள்! அப்படியானால் உங்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் அருமையான மீடியா பிளேயராகத் தோன்றும். இதன் மூலம் நம் பலவகையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் கூடுதலான விருப்பங்கள், பல வகையான பைல் கையாளுதல் என விருப்பப்பட்டால் விண் ஆம்ப் மீடியா பிளேயர் சரியான சாதனம். கட்டணத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு என்று செய்தி கிடைத்தாலும் இலவச தொகுப்பிலேயே நமக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. மேலும் ரியல் பிளேயர் போல கட்டணப்பதிப்பு பெற்றால் தான் இதை எல்லாம் இயக்குவேன் என அடம்பிடிக்காது. எனவே இலவச விண் ஆம்ப் அனைவரும் தேர்வு செய்திடும் மீடியா பிளேயராக இருப்பதில் வியப்பில்லை.


0 comments:
Post a Comment